search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளியநல்லூர் மக்கிளின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் வெளியேறும் காட்சி.
    X
    வேளியநல்லூர் மக்கிளின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் வெளியேறும் காட்சி.

    நெமிலி அருகே வேளியநல்லூர் மக்கிளின் கால்வாயில் உடைப்பு- ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்

    நெமிலி அருகே வேளியநல்லூர் மக்கிளின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. பலத்த மழையால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெமிலி அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மழைநீர் அதிகளவு தேங்கியிருந்தது.

    அந்த மழைநீரின் கொள்ளளவை குறைக்க வேண்டி வேளியநல்லூர் மக்கிளின் கால்வாயில் மழைநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் நேற்று முன்தினம் இரவில் இருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கால்வாய்க்கு அருகில் ஆக்கிரமிப்பு மற்றும் மண் அள்ளப்பட்டுள்ளதால், மக்கிளின் கால்வாய் கரை பகுதி சேதம் அடைந்திருந்தது. இதனால் மக்கிளின் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளநீர் அருகில் உள்ள சுமார் 20 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

    அதில் விவசாயிகளான செல்வம், சுந்தரம் ஆகியோரின் நிலம் தலா 1 ஏக்கர், பெருமாள் நிலம் 3 ஏக்கர் நெற்பயிர், முத்துவின் 1 ஏக்கர் வேர்க்கடலை பயிர், சுந்தரத்தின் 1 ஏக்கர் மல்லிகைப்பூ தோட்டம், நடவுக்கு தயார் நிலையில் இருந்த நெல் நாற்றங்கால், வெண்டை மற்றும் கத்தரி தோட்டங்கள் வெள்ளநீரில் மூழ்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து வெள்ளநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. கரையோரம் உள்ள சுமார் 40 வீடுகளுக்கு அருகிலும், வேளியநல்லூர் ஊருக்குள் 450 வீடுகளுக்குள், ஜாகிர்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
    Next Story
    ×