search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிற்பம்.
    X
    கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிற்பம்.

    ராமநாதபுரம் அருகே ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

    ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரரின் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் சிவன் கோவிலில் புதிதாக மகாமண்டபம் கட்டும்பணி நடந்து வருகிறது. சேதமடைந்த பழைய மகாமண்டபத்தில் இருந்த கற்கள், தூண்கள் கோவில் பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அப்பகுதியை ஆய்வு செய்தபோது, அங்கு கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரர் சிற்பம் இருந்ததை கண்டுபிடித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல், மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி, சூடியூர், மஞ்சூர், செழுவனூர், மாரந்தை உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஆனந்தூர் சிவன் கோவிலுக்குத் தெற்கில் உள்ள குளத்தின் கரையில், சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம், கோவில் தூண்கள் கிடந்த பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. கருங்கல்லால் ஆன இந்த சிற்பம் 3 அடி உயரம், 1½ அடி அகலம் உள்ளது. கீழே பீடமும், அதன் மேல் மகாவீரரும் இருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது.

    பீடத்தில் 3 சிங்கங்கள் உள்ளன. அதன் மேல் உள்ள சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவர் முகம் சிதைந்துள்ளது. அவருக்கு பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. தலைக்கு மேல் இருந்த முக்குடை, அசோகமரம் உடைந்து சேதமாகியுள்ளன. மகாவீரரின் இருபுறமும் உள்ள இயக்கர்களின் சிற்பங்கள் உடைந்துள்ளன. சிங்கம் மகாவீரரின் வாகனம் ஆகும். இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாக கருதலாம். பல ஆண்டுகளாக வெளியில் கிடந்துள்ளதால், வெயில், மழையால் சிற்பம் சேதமடைந்து உள்ளது. இந்த சிற்பம் கிடைத்திருப்பதன் மூலம் கி.பி.10-ம் நூற்றாண்டு அளவில் இந்த ஊரில் ஒரு சமணப்பள்ளி இருந்திருக்கும் எனக் கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×