search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கோவையில் வாலிபர் குத்திக்கொலை- வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்

    கோவையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை குத்திக்கொலை செய்து வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கோவையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை குத்திக்கொலை செய்து வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    தேனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் கோவை விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து காளப்பட்டியில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் வேலை செய்து வந்தார். இவருடன் கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த சுஜித் (30) தங்கி இருந்து டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    2 பேரும் நண்பர்கள் என்பதால் வெளியே ஒன்றாக செல்வது வழக்கம். அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஒண்டிப்புதூரில் உள்ள நண்பர் அறைக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்ட, பின்னால் சுஜித் உட்கார்ந்திருந்தார்.

    விமான நிலையம் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனி அருகே சென்றபோது அங்கு 4 பேர் நின்றனர். அவர்கள் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. அந்த காரை தொடர்ந்து விக்னேஷ்-சுஜித் வந்தபோது, அந்த 4 பேரும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

    அவர்கள் அருகில் வந்தபோது, தப்பி சென்றுவிடாமல் இருக்க மோட்டார் சைக்கிளை பிடித்து, தடுத்து நிறுத்தினர். உடனே அந்த கும்பல் கத்தியை காட்டி பணம், செல்போன் வைத்திருந்தால் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மிரட்டினர். உடனே பயந்துபோன சுஜித், தான் வைத்திருந்த செல்போனை கொடுத்தார்.

    அடுத்து விக்னேசிடம் அந்த கும்பலில் ஒருவன் கத்தியை காட்டி செல்போனை கேட்டான். அதற்கு தர முடியாது என்று கூறி விட்டு மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலில் ஒருவன் விக்னேசின் கழுத்தில் திடீரென்று தான் வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு செல்போனை பறித்தான்.

    பின்னர் சுஜித்தையும் கத்தியால் குத்த முயன்றான். ஆனால் அவர் மீது பட வில்லை. உடனே அந்த வழிப்பறிக் கும்பல், 2 பேர் வந்த மோட்டார் சைக்கிளின் சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது. கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் வலியால் அலறினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுஜித் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விக்னேஷ் இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சம்பவம் நடந்த இடம் இருட்டாகவும், ஆள் நடமாட்டம் இல்லாமலும் இருந்ததால் அங்கு கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை.

    மேலும் இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வழிப்பறி ஆசாமிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    வாலிபர் கொலையில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்து இருப்பதால் அவர்களை விரைவில் கைது செய்து விடுவோம் என்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறினார்.
    Next Story
    ×