search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    23 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் - பெண்கள் உள்பட 1,464 பேர் கைது

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 1,464 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திண்டுக்கல்:

    தொழிலாளர் நலச்சட்டத்தில் திருத்தம், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் மயம் ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை தடுக்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் இணைந்து நேற்று வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மாநில தலைவர் பசீர்அகமது தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ஜெயமணி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி தலைமையில் நகர செயலாளர் ஆசாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் பாலசந்திரபோஸ் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து மறியலில் ஈடுபட்ட 75 பேர் கைதாகினர். ரெட்டியார்சத்திரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பொன்னகரத்தில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச்செயலாளர் அஜாய்கோஷ், ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகம் உள்பட 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பழனி பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் சந்திரன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். பழனி தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ..சி. மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். தொப்பம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமசாமி உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

    நத்தம் பஸ்நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் தலைமையில், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராணி, விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 110 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர். சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மறியல் செய்த விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் பாபு உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் 426 பெண்கள் உள்பட மொத்தம் 1,464 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நகர தொழிற்சங்க இணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் திண்டுக்கல் -பழனி சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சங்க நிர்வாகி வாஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 620 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், பணிக்கு வரவில்லை. இதுகுறித்து அந்தந்த துறை சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×