search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிப்படைந்த வெங்காயம்.
    X
    பாதிப்படைந்த வெங்காயம்.

    பேரையூர் பகுதியில் திருகல் நோயால் வெங்காய பயிர் பாதிப்பு

    பேரையூர் அருகே பனிப்பொழிவால் வெங்காய பயிரில் திருகல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பேரையூர்:

    பேரையூர் அருகே உள்ள சந்தையூர், பாறைப்பட்டி, கீழப்பட்டி, சிலைமலைபட்டி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெங்காயம் பயிர் செய்யப்பட்டது. தற்போது இந்த பகுதியில் பெய்யும் பனிப்பொழிவாலும் மற்றும் அதிகமான ஈரப்பதத்தினாலும் வெங்காய பயிரில் திடீரென்று திருகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் செடியின் நுனி பகுதி கருகியது. தொடர்ந்து செடிகள் வளர்ச்சி இல்லாமல் போய்விட்டது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேதமடைந்த வெங்காயம் எதற்கும் பலனில்லாமல் குப்பைக்கு தான் செல்லும். சென்ற ஆண்டும் இதேபோன்றுதான் பனிப்பொழிவால் வெங்காயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் வெங்காய பயிருக்கு பயிர் காப்பீடு செய்தோம். ஆனால் அந்த காப்பீட்டு தொகை இன்னும் வரவில்லை என்று கூறினர்.

    இதுகுறித்து டி.கல்லுப்பட்டி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெசிமா பானு கூறியதாவது:-

    வெங்காய சாகுபடி செய்த விவசாயிகள் எக்டேருக்கு ரூ.4,541 பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் தங்களின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, இ-சேவை மையம் ஆகிய இடங்களில் காப்பீடு தொகை செலுத்தலாம். சென்ற ஆண்டு வெங்காய பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×