search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார ரெயில்
    X
    மின்சார ரெயில்

    அத்தியாவசிய பணியாளர்களுக்கான மின்சார ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடக்கம்

    அத்தியாவசிய பணியாளர்களுக்காக மீண்டும் 244 மின்சார ரெயில் சேவைகள் வழக்கம்போல் இன்று முதல் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனாவால் ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் கொரோனா முன்கள பணியாளர்களுக்காக குறைந்த அளவில் இயக்கியது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

    அதன்பின், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மின்சார ரெயில்களில் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சென்னையில் 244 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, நிவர் புயல் எதிரொலியால் 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதிகளில் 244 மின்சார ரெயில் சேவைகளை சென்னை ரெயில்வே கோட்டம் ரத்து செய்தது.

    இதையடுத்து நிவர் புயல் கரையை கடந்ததால் நேற்று மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்தது. 
    இந்நிலையில், இன்று முதல் அத்தியாவசிய பணியாளர்களுக்காக மீண்டும் 244 மின்சார ரெயில் சேவைகள் வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    பயணிகள் உரிய ஆவணத்துடன் ரெயில் நிலையம் வந்தால் மட்டுமே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×