search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டும் மழையில் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை அண்ணாசாலையை படத்தில் காணலாம்.
    X
    கொட்டும் மழையில் வெறிச்சோடி காணப்பட்ட சென்னை அண்ணாசாலையை படத்தில் காணலாம்.

    மூடப்பட்ட கடைகள், வெறிச்சோடிய சாலைகள்- ஊரடங்கை நினைவூட்டிய நிவர் புயல்

    நிவர் புயலால் அறிவிக்கப்பட்ட பொது விடுமுறையையொட்டி, சென்னையில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடின. இந்த காட்சிகள் அனைத்துமே ஊரடங்கை மீண்டும் நினைவுபடுத்துவது போல அமைந்தன.
    சென்னை:

    நிவர் புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் வெளியிட்டார். முதல்-அமைச்சரின் பொது விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து ஏராளமான தனியார் நிறுவனங்களும் உடனடியாக ஊழியர்களுக்கு விடுமுறை என்று அறிவித்துவிட்டன.

    இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாலகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தவிர இதர பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் கடைகள் அனைத்தும் முழுவதும் மூடப்பட்டன. வாகனங்கள் நடமாட்டமின்றி சாலைகளும் வெறிச்சோடின.

    சென்னையில் நேற்று கடைகள் முழுமையாகவே அடைக்கப்பட்டன. ஏராளமான உணவகங்கள் கூட நேற்று மூடப்பட்டிருந்தன. பாரிமுனை, தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் நேற்று ஆள் அரவமின்றி காட்சி அளித்தன.

    அதேபோல காமராஜர் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, எசுபிளனேடு சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின. மிக குறைவான அளவிலேயே வாகனங்கள் இயக்கப்பட்டன. நகரில் இயக்கப்பட்ட மாநகர பஸ்களும் ஆட்கள் நடமாட்டமின்றி காலியாகவே சென்றன. சாலைகள் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கியிருந்ததால் ஆட்டோக்களும் பெரிதளவில் காணப்படவில்லை.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் சென்னையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. சாலைகளும் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. கொரோனா பிரச்சினையால் இயல்பு வாழ்க்கையும் முடங்கி போனது.

    தற்போது நிவர் புயல் அந்த கோதாவில் குதித்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கை நிவர் புயல் நினைவூட்டி இருக்கிறது. நகரில் காணுகிற காட்சிகளும் அதையே நினைவூட்டின. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த பதிவுகள் வைரலாக பரவின.
    Next Story
    ×