search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    அதிமுக கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்- முருகன் பேட்டி

    புயல் மழை காரணமாக பா.ஜ.க.வின் வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாகவும், அ.தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
    திருச்சி:

    பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிவர் புயல், மழை எதிரொலியாக தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து வேல் யாத்திரையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (அதாவது நேற்று) தஞ்சை, நாகை, திருவாரூரில் நடக்கக்கூடிய வேல் யாத்திரை, நாளை(அதாவது இன்று) திருச்சியில் நடக்க இருந்த வேல் யாத்திரை மற்றும் தேனி, மதுரையில் நடக்க இருந்த யாத்திரையும் ரத்து செய்யப்படுகிறது.

    டிசம்பர் 4-ந் தேதி முருகப்பெருமானின் இன்னும் 4 அறுபடை வீடுகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திட்டமிட்டபடி டிசம்பர் 5-ந்தேதி திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு பெறும்.

    பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று அரசுடன் இணைந்து மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கிற பணியினையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு, குடிநீர் வசதி செய்து நிவாரணப்பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்று சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர்.

    அதே வேளையில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் தான் கூட்டணி என்பதையும், எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பதையும் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி குறித்த முடிவை தெரிவிக்கும் அதிகாரம் எனக்கில்லை. நிச்சயமாக வருகிற தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    தமிழகத்தில் மத்திய அரசு பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தமிழக அரசும் நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். 7 பேர் விடுதலையில், சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து தமிழக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்,
    Next Story
    ×