
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் தற்போது நிவர் புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையினை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ராமநாதபுரம் நகர்பகுதிகளில் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு, அரண்மனை சாலை ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மழைநீரை உடனடியாக அகற்ற நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பாதாள சாக்கடை வெளியேற்று நிலையம் மற்றும் மாடக்கொட்டான் பகுதியில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.