search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜாமடம் அக்னியாறு முகத்துவாரத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
    X
    ராஜாமடம் அக்னியாறு முகத்துவாரத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    நிவர் புயல் எச்சரிக்கை- கடலோர பகுதிகளில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

    நிவர் புயல் எச்சரிக்கையால் கடலோர பகுதிகளில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.
    அதிராம்பட்டினம்:

    தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    கடலோர பகுதிகளான தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் நசுவினியாறு மற்றும் பாட்டுவனாச்சி ஆறு முகத்துவாரம் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற கலெக்டர் கோவிந்தராவ், எவ்வித தடையும் இன்றி தண்ணீர் சென்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.

    மேலும் அவர், ராஜாமடம் அக்னியாறு முகத்துவாரத்தில் மணல் திட்டுகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து ராஜாமடம் கீழத்தோட்டம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நிவர் புயலையொட்டி எந்தெந்த இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் நுழைய வாய்ப்பு இருக்கிறதோ? அந்த பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக அழைத்து சென்று நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து உள்ளாட்சிகளிலும் ஜெனரேட்டர், லாரிகள், பொக்லின் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேவையான அளவு மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பு மற்றும் குறைபாடுகளை மாவட்ட நிர்வாகத்திற்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர், பொதுப்பணித்துறை கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×