search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பழமையான மண்டபத்தில் புதையலுக்காக பள்ளம் தோண்டியவர் கைது

    திருத்தணி அருகே பழமையான மண்டபத்தில் புதையலுக்காக பள்ளம் தோண்டியவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அகூர் ஊராட்சியில் திருத்தணி முருகன் கோவிலில் உற்சவர் முருகனை சுமந்து செல்லக்கூடியவர்கள் வசித்து வசிக்கின்றார்கள். அவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள் உற்சவர் முருகபெருமான் இந்த கிராமத்தில் உள்ள ரெட்டி குளம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பழமை வாய்ந்த இந்த மண்டபம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால் மற்ற நாட்களில் இங்கு மக்கள் நடமாட்டம் இருப்பது இல்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பழமையான மண்டபத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது. உடனே கிராமத்தில் உள்ள சிலர் அந்த மண்டபத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 3 பேர் மண்டபத்தின் ஓரத்தில் பள்ளம் தோண்டி கொண்டிருப்பதை கண்டனர்.

    கிராம மக்களை பார்த்ததும் 2 பேர் தப்பிச்சென்று விட்டனர். கிராம மக்கள் ஒருவரை பிடித்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் பாபு (வயது 55) என்பதும் அவர் திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கட்டிட தொழிலாளியான அவர் இங்கு எப்படி வந்தார்? எதற்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் தன்னை திருத்தணியை சேர்ந்த மகேஷ் என்பவர் பள்ளம் தோண்ட அழைத்து வந்ததாக தெரிவித்தார். அந்த மண்டபத்தில் பழமை வாய்ந்த சிலைகள் இருக்கலாம் என்றும், அங்கு புதையல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியதாக பாபு தெரிவித்தார்.

    திருத்தணி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×