search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி
    X
    தீபாவளி

    தீபாவளி பண்டிகைக்கு ஆடை விற்பனை 15 சதவீதம் சரிவு

    இந்த ஆண்டு கொரோனாவின் எதிரொலியாக 15 சதவீதம் ஆடை விற்பனை சரிவை சந்தித்தது.
    திருப்பூர்:

    திருப்பூரில் ஆண்டுதோறும் ஆடை தயாரிப்பு நடந்து வருகிறது. குளிர்காலம் மற்றும் கோடை காலங்களில் இதற்கேற்ற வகையிலான ஆடைகள் தயாரிக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறும். இதுபோல் அவ்வப்போது வருகிற குறுகிய கால சீசன்களின்படியும் ஆடை தயாரிப்பு நடக்கும்.

    கால்பந்து, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களிலும் ஆடைகள் அந்த சீசன்களில் ஆடைகள் தயார் செய்யப்பட்டு வர்த்தகம் நடக்கும். இதில் முக்கிய சீசனாக தீபாவளி பண்டிகை இருந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை கடந்த 14-ந் தேதி முடிவடைந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆடை விற்பனை கடந்த ஆண்டை விட 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

    இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின் போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்தது. அந்த ஆர்டர்களின்படி ஆடைகளும் தயாரித்து அனுப்பப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் பாதிப்பு நாடு முழுவதும் இருந்து வருவதால், மக்களின் ஆடை வாங்கும் திறன் சற்று குறைவாகவே இருந்தது. இதனால் ஆடை வியாபாரிகள் கடந்த ஆண்டை விட குறைவாகவே ஆர்டர்கள் கொடுத்தார்கள்.

    அதன்படி கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.300 கோடிக்கு ஆடை விற்பனை நடந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் எதிரொலியாக 15 சதவீதம் ஆடை விற்பனை சரிவை சந்தித்தது. ரூ.267 கோடிக்கும் மட்டும் உள்நாட்டு வர்த்தகம் நடந்துள்ளது. இருப்பினும் கொரோனா காலத்தில் ஆடை வர்த்தகம் இந்த அளவிற்கு நடந்தது திருப்தியளிக்கிறது. தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் அரசின் ஆதரவு ஆகியவற்றால் இந்த அளவிற்கு விற்பனை நடந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×