
தர்மபுரி மாவட்டம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளை முடித்து வைப்பது, காணாமல் போனவர்களை அடையாளம் காண சிறப்பு முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
காணாமல் போனவர்களின் படங்கள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு இணையதளம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மர்மமான முறையில் இறந்தவர்களின் படங்கள் காண்பிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் இவர்கள் தானா? என கேட்கப்பட்டது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பெண்கள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.