search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதமலைக்கு சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்
    X
    போதமலைக்கு சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்

    போதமலைக்கு சாலைவசதி செய்யாவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் போதமலைக்கு சாலை வசதி செய்து தராவிட்டால், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
    நாமக்கல்:

    போதமலை கீழுர், மேலூர், கெடமலை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    போதமலையில் சுமார் 3,500 பொதுமக்கள் வசித்து வருகிறோம். சாலை வசதி இல்லாத காரணத்தால் இங்கு விளையும் விலை பொருட்களை நடந்தே தலைசுமையாக தூக்கி சென்று ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு காலவிரையம், பண விரையம் ஏற்பட்டு வருகிறது.

    மலைக்கிராங்களில் மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணிகளை மகப்பேறு காலங்களில் தொட்டில் கட்டி தூக்கி வந்து, ராசிபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

    வெண்ணந்தூர் ஒன்றியம் போதமலை கீழுர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகம் முதல் மேலூர் வரை மற்றும் புதுப்பட்டி முதல் கெடமலை வரை வனப்பகுதி வழியாக புதிய தார்சாலை அமைக்க நில அளவீடு செய்யும் பணி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட, பசுமை தீர்ப்பாயத்தின் தடையில்லா சான்று கிடைக்க பெறாமை முக்கிய காரணம் என தெரியவருகிறது.

    எனவே அந்த தடையில்லா சான்றினை பெற்று மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்கும் பணியை வெகுவிரைவாக முடித்து எங்களுக்கு சாலை வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்குள் சாலை வசதியினை ஏற்படுத்தாத பட்சத்தில் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் ஒன்று கூடி ஒருமனதாக முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

    இதேபோல் பரமத்திவேலூர் தாலுகா செருக்கலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    செருக்கலை கிராமத்தில் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது எங்களது கிராமத்திற்கு மாதத்திற்கு ஒருமுறை கூட காவிரி குடிநீர் வருவது இல்லை. ஆனால் அருகில் உள்ள கோலாரம் கிராமத்திற்கு வாரத்திற்கு 2 முறை குடிநீர் வருகிறது. எங்கள் கிராமத்திற்கு மட்டும் வருவது இல்லை.

    மேலும் குடிநீருக்கு எங்கு சென்றாலும் கிடைப்பது இல்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் சொல்லியும், தீர்வு கிடைக்கவில்லை. எனவே தாங்கள் எங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
    Next Story
    ×