search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமங்கலம் அருகே வாலிபரை கொன்று கண்மாயில் வீசிய 7 பேர் கைது

    திருமங்கலம் அருகே பழிக்குப்பழியாக வாலிபரை கொலை செய்து கண்மாயில் வீசிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் மம்சாபுரத்தை சேர்ந்த பால் நிறுவன ஊழியர் மணிகண்டன்(வயது 35). இவர் கடந்த ஜூன் மாதம் புங்கன்குளம் அருகே உள்ள தோட்டத்து வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அட்டாக் பிரகாஷ்(33) வழக்கு விசாரணைக்காக உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    விசாரணை முடிந்து அவர் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில், 7 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் சென்று மோதியது. இதில் அவர் கீழே விழுந்தார். இதைதொடர்ந்து அட்டாக் பிரகாசை மர்ம கும்பல் அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. பின்னர் அவரது உடலை கண்மாயில் வீசிச் சென்றனர். அட்டாக் பிரகாஷ் பின்னால் அமர்ந்து வந்த அவருடைய நண்பர் பார்த்திபன் தப்பிச்சென்றார்.

    பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவத்தில் மணிகண்டனின் உறவினர் ரமேஷ் பாபு என்பவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு வினோதினி தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலையில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷ்பாபு(35), முத்துராஜா(48), சுகுமார்(28), உதயசூரியன்(40), இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அலெக்ஸ்குமார்(35), மதுரை திடீர்நகர் முத்துக்குமார்(35), ஜெயகாந்தன்(30) ஆகியோரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 7 பேரையும் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாரதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை அடுத்த மாதம் 7-ந் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை மேலூர் கிளை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த கொலை சம்பந்தமாக போலீசார் கூறியதாவது, மணிகண்டன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக அவரது உறவினர் ரமேஷ்பாபு உள்பட சிலர் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். இந்த கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×