search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்பழஞ்சியில் வெங்காய பயிரில் நோய் தாக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் காண்பித்தனர்.
    X
    தென்பழஞ்சியில் வெங்காய பயிரில் நோய் தாக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் காண்பித்தனர்.

    வெங்காயம், தக்காளி செடிகளில் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை

    திருப்பரங்குன்றம் அருகே வெங்காயம், தக்காளி செடிகளில் நோய் தாக்கி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி, வடபழஞ்சி, மாவிலிபட்டி, மீனாட்சிபட்டி, வெளிப்பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி செடிகள் பயிரிட்டுள்ளனர். இதில் கத்தரி செடியை தவிர மற்ற பயிர்களில் நோய் தாக்கி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பூ பிஞ்சு பருவத்தில் நோய் தாக்கி ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வேகமாக பரவி வருகிறது. இதனையொட்டி செடிகளை வேரோடு பிடுங்கி வெளியேற்றுகிறார்கள். இதனால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விவசாயி மெய்ராஜன் கூறும்போது, எனது தோட்டத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் விவசாயம் செய்துள்ளேன். அதில் நோய் ஏற்பட்டு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்காக வாங்கிய கடனை எவ்வாறு அடைப்பேன் என்று வேதனையுடன் கூறினார். மேலும் அவர் கூறும்போது தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. ஆறுதல் சொல்லக்கூட அதிகாரிகள் முன்வரவில்லை என்றார்.

    விவசாயி முஜிபூர் ரகுமான் கூறும்போது, எனது தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிட்டு விவசாயம் செய்தேன். அதில் நோய் தாக்கிய 2 ஏக்கர் மிளகாய் செடிகளை பிடிங்கி வெளியேற்றி விட்டோம். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் நேரடியாக தகவல் தெரிவித்து நேரடி ஆய்வு செய்யுமாறு வலியுறுத்தினேன். ஒரு வாரம் ஆகியும் இதுநாள் வரை அதிகாரிகள் ஒருவர் கூட வரவில்லை. என் போன்ற சிறு,குறு விவசாயிகள் பாதிப்பை கண்டறிந்து உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×