search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க அலைமோதிய சுற்றுலா பயணிகளை காணலாம்
    X
    ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க அலைமோதிய சுற்றுலா பயணிகளை காணலாம்

    ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்- அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்

    விடுமுறை நாளையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
    பென்னாகரம்:

    சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அலைமோதினர். பின்னர் அவர்கள் சின்னாறு பரிசல் துறையில் இருந்து குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் மணல் திட்டு வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

    ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
    Next Story
    ×