search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திண்டுக்கல்லில் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை - 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    திண்டுக்கல்லில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    திண்டுக்கல்:

    தீபாவளி பண்டிகை கடந்த 14-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை சாப்பிட்டும் உற்சாகமுடன் பண்டிகையை கொண்டாடினர். இதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் பட்டாசு குப்பைகள் அதிக அளவில் தேங்கின. இவற்றை சேகரிக்கும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பைகள், தம்ளர்கள், தட்டுகள் என அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் ஏராளமாக கிடைத்தன. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

    பின்னர் மாநகர் நல அலுவலர் மரு.லட்சிய வர்ணா மற்றும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் திண்டுக்கல் மேற்குரதவீதி, கடைவீதி, வடக்குரதவீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் மாநகர் நல அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த 10 கடைகளில் 250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்திருந்தது.

    இந்த நிலையில் தற்போது 250 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். நகரில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. எனவே திண்டுக்கல்லில் உள்ள கடைகளில் வாரந்தோறும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
    Next Story
    ×