search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷாவை வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்
    X
    அமித் ஷாவை வரவேற்ற முதல்வர், துணை முதல்வர்

    சென்னை வந்தார் அமித் ஷா- விமான நிலையத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வரவேற்றனர்

    சென்னை வந்த உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு பாஜக மற்றும் அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    சென்னை:

    பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர். 

    இதேபோல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.

    விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.  அமித் ஷா வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×