search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊர்க்காவல் படையின் அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்
    X
    ஊர்க்காவல் படையின் அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்

    சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை- பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு, பெரம்பலூர் கடைவீதியில் உள்ள நகர போக்குவரத்து போலீஸ் நிலைய வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி ஊர்க்காவல் படை அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பாலமுருகன், சுப்பராமன், ஊர்க்காவல் படையின் பெரம்பலூர் மண்டல தளபதி ராம்குமார், துணை மண்டல தளபதி சித்ரா உடனிருந்தனர். முன்னதாக ஊர்க்காவல் படை வீரர்களின் மரியாதையை போலீஸ் சூப்பிரண்டு ஏற்றுக்கொண்டார்.

    இதேபோல் நகர போக்குவரத்து போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி பள்ளியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பின்னர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.

    அப்போது அவர் பேசுகையில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி பள்ளி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து வகுப்புகள் எடுக்கப்படவுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். குடிபோதையில் வாகனங்கள் இயக்கக்கூடாது. செல்போன் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது. போக்குவரத்து சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    இதில் பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×