search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 4 பேரையும் படத்தில் காணலாம்.
    X
    கைதான 4 பேரையும் படத்தில் காணலாம்.

    நாமக்கல்லில் கடத்தப்பட்ட டேங்கர் லாரி அதிபர் திண்டுக்கல்லில் மீட்பு - முன்னாள் டிரைவர் உள்பட 6 பேர் கைது

    நாமக்கல்லில் கடத்தப்பட்ட டேங்கர் லாரி அதிபரை திண்டுக்கல்லில் மீட்ட போலீசார், முன்னாள் டிரைவர் உள்பட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கணேசபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 59). டேங்கர் லாரி அதிபர். இவருக்கு சொந்தமான அலுவலகம் திருச்சி சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் பொன்னுசாமி அலுவலகத்திற்கு அருகே உள்ள டீக்கடை பகுதியில் நின்றிருந்தார். அப்போது காரில் வந்த மர்மநபர்கள் அவரை கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து அவருடைய மனைவி நிர்மலா நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், ஈரோடு மாவட்டம் சிவகிரி எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் லாரி டிரைவர் காமராஜ் (57) ரூ.8½ லட்சம் அடமான கடன் பிரச்சினையில் தனது கணவரை கடத்தி சென்று இருக்கலாம் என கூறி இருந்தார். அதன்பேரில் நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே மாவூர் அணைப்பிரிவு பகுதியில் ரோந்து பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் ஒருவரை அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக உணவு சாப்பிட வைத்து கொண்டு இருப்பதை பார்த்தனர். இதையடுத்து அந்த நபரை அவர்களிடம் இருந்து மீட்ட அம்மையநாயக்கனூர் போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் நாமக்கல்லில் இருந்து கடத்தப்பட்ட டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கடத்தி வந்த 6 பேரை மடக்கி பிடித்த அம்மையநாயக்கனூர் போலீசார் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திண்டுக்கல் விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் மீட்கப்பட்ட பொன்னுசாமி, அவரை கடத்தி சென்ற 6 பேரையும் நாமக்கல்லுக்கு அழைத்து வந்தனர்.

    இங்கு காமராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கடத்தப்பட்ட டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமியிடம், காமராஜ் லாரி டிரைவராக கடந்த 2006-ம் ஆண்டு பணியாற்றி உள்ளார். அப்போது அவர் வீடு கட்டுவதற்கு காலி நில பத்திரத்தை அடமானமாக வைத்து பொன்னுசாமியிடம் ரூ.8½ லட்சம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் பொன்னுசாமி இன்னும் தனக்கு கடன் தொகையில் பாக்கி வரவேண்டி உள்ளது என கூறி கடந்த 2 ஆண்டுகளாக பத்திரத்தை தர மறுத்து வந்துள்ளார். எனவே அவரை மிரட்டி சொத்து பத்திரத்தை மீட்டு விடலாம் என்ற எண்ணத்தில் காமராஜ் தனது மகன் மற்றும் அவரது நண்பர்களுடன் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த கடத்தல் வழக்கில் காமராஜ், தட்டாம்பாளையம் ஜீவா (27), கொளத்துபாளையம் சரவணன் (37), கவின்குமார் (23) மற்றும் 17, 18 வயதுடைய 2 வாலிபர்கள் என மொத்தம் 6 பேரை நாமக்கல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த வழக்கில் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×