search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகல்விளக்குகள்
    X
    அகல்விளக்குகள்

    கரூரில் அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    கார்த்திகை தீப திருநாள் வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு கரூரில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    கரூர்:

    சித்திரையில் தொடங்கி பங்குனி வரையுள்ள 12 தமிழ் மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் கார்த்திகை மாதம் அதிகளவு மழைப்பொழிவு உள்ள கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகளவு இந்த மாதத்தில் மலரும். இதனால் கார்த்திகை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அய்யப்ப பக்தர்கள் இந்த மாதத்தில் விரதம் தொடங்கி கடைப்பிடித்து சபரிமலைக்கு ஆண்டுதோறும் செல்கின்றனர். இந்த காலத்தில் கார்த்திகை எனப்படும் நட்சத்திர கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றுவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கார்த்திகை மாதம் பெற்றிருக்கிறது. அதோடு கார்த்திகை மாதத்தில் வீடுகள், கோவில்களில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கேற்றப்பட்டு வழிபாடு செய்வது தொன்றுதொட்டு நடத்தப்படுகிறது.

    தற்போது நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம் தற்போது பெரும்பாலும் சில்வர், பிளாஸ்டிக் பாத்திரங்களையே சமையல் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி வருகிறோம். இதனால் மண்பாண்ட பொருட்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. எனினும் பாரம்பரிய முறையை மறந்து விடாமல் இருக்கவும், சம்பிரதாய நிமித்தமாகவும் கார்த்திகை தீப திருநாள், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு, பானை, அடுப்பு உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்துகிறோம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் பஞ்சமாதேவி, புலியூர், கோயம்பள்ளி, வாங்கல், பசுபதிபாளையம், ஐந்துரோடு, லாலாபேட்டை உள்ளிட்ட இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    வியாபாரிகள், பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் நேரடியாக அவர்களை அணுகி தங்களுக்கு தேவையான அகல்விளக்குகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதில் பல்வேறு அளவில் எண்ணெய் பிடிக்கும் வகையிலான அகல் விளக்குகள் ரூ.5, ரூ.10, ரூ.20-க்கும், அதை விட பெரியது ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதம் நடந்து வருவதால் மக்கள் பலர் தினமும் தங்களது வீடுகளின் மாடத்தில் விளக்கேற்றி வழிபாடு நடத்த ஆர்வத்துடன் அகல்விளக்குகளை வாங்கி செல்கின்றனர்.

    மண்பாண்ட தொழிலில் ஈடுபடும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டம், அகல் விளக்குகள் தயாரித்து, விற்பனை செய்து வருகிறோம். 5 மில்லி முதல் 1 லிட்டர் பிடிக்கும் அளவுக்கு அகல் விளக்குகள் தயாரிக்கிறோம். கொரோனாவால் கடந்த 6 மாதமாக விளக்குகள் விற்பனை முழுவதும் குறைந்து விட்டது.

    மேலும் கோவில்கள் திறக்காததாலும் விளக்குகள் விற்பனை ஆகவில்லை. கோவில்களின் திறப்புக்கு பின்தான் விளக்குகளின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கார்த்திகை தீப திருநாளையொட்டி அதிகமான மண் விளக்குகளை தயாரித்து வருகிறோம். முன்புபோல் விளக்குகள் செய்வதற்கு மண் சுலபமாக கிடைப்பதில்லை, என்றார்.
    Next Story
    ×