search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்குறுங்குடி அருகே இறந்தவர் உடலை கால்வாயில் இறங்கி கிராம மக்கள் சுமந்து செல்லும் காட்சி.
    X
    திருக்குறுங்குடி அருகே இறந்தவர் உடலை கால்வாயில் இறங்கி கிராம மக்கள் சுமந்து செல்லும் காட்சி.

    இறந்தவரின் உடலை கால்வாயில் இறங்கி சுமந்து செல்லும் கிராம மக்கள்

    திருக்குறுங்குடி அருகே இறந்தவரின் உடலை கால்வாயில் இறங்கி கிராம மக்கள் சுமந்து சென்றனர்.
    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இறையடிக்கால், கட்டளை புதுத்தெரு, மேலக்கட்டளை கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை இறையடிக்கால்வாய் கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் அங்கு பாலம் இல்லாததால் அங்கு செல்ல கிராம மக்கள் கால்வாயை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் கிராம மக்கள் உடல்களை கால்வாய்க்குள் இறங்கி சுமந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் இறந்தவர்களின் உடல்களை ஆபத்தான முறையில் சுமந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கட்டளை புதுத்தெருவை சேர்ந்த நாலாயுதம் (வயது 75) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை கால்வாயில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சுமந்தபடி கிராம மக்கள் சென்றனர். கால்வாய் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘தலைமுறை தலைமுறையாக இந்த அவலம் நீடித்து வருகிறது. நாங்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தற்போது பதவி ஏற்றுள்ள நெல்லை கலெக்டர் இதில் தலையிட்டு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.
    Next Story
    ×