search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்: சிறைத்துறையிடம் மனு தாக்கல்

    நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

    அவர்களை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியநிலையில் தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை அப்படியே முழுமையாக சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

    இதற்கிடையே சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, அபராத தொகையை செலுத்தினால் சசிகலா வருகிற ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு காலம் அவர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றும் சிறை நிர்வாகம் பதிலளித்தது.

    இந்தநிலையில் சசிகலா தரப்பில் அவர் செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட தனிக்கோர்ட்டு, அபராதம் செலுத்தப்பட்டது குறித்து பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை அவரது வக்கீல்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் பெங்களூருவில் முகாமிட்டு உள்ளார்.

    அவர், கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகை காலத்தை அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அவர்கள், பரப்பன அக்ரஹார சிறைத்துறை முதன்மை கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளிக்கும்படி கூறியதை தொடர்ந்து வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று முதன்மை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். இந்த மனுவை பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதன்மை கண்காணிப்பாளர் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-

    சசிகலாவை பொறுத்தமட்டில் ஜனவரி 27-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. சசிகலாவை பொறுத்தமட்டில் நன்னடத்தை விதிகளின் கீழ் அவருக்கு 129 நாட்கள் சலுகை உள்ளது.

    ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்களுக்கு கர்நாடக மாநில சிறைத்துறை சலுகை வழங்கியது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளோம்.

    அதுமட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு சலுகை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும், மாநில அரசு உரிய முடிவெடுக்கலாம் என்றும் உள்துறை அளித்த பதில் கடிதத்தையும் ஆதாரமாக அளித்துள்ளோம்.

    அதேபோன்று, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த தீர்ப்புகளில் கூட தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளோம்.

    இதையெல்லாம் பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனது சகோதரர் இறுதி சடங்கில் கூட சசிகலா கலந்து கொள்ள முடியவில்லை என்பது போன்று பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி, தாமதமின்றி முடிவெடுக்க வலியுறுத்தி உள்ளோம். நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சசிகலா விடுவிக்க வேண்டும் என்று அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருவதால் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×