search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி.
    X
    சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி.

    சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி

    நங்கவள்ளி அருகே பெரியசோரகையில், இன்று சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலமாக சேலத்திற்கு நேற்று இரவு வந்தார். மாவட்ட எல்லையான சங்ககிரி பகுதியில் கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், என்.சந்திரசேகரன் எம்.பி. ஆகியோர் முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்த முதல்-அமைச்சருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அரசுத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    முதலில் நங்கவள்ளி அருகே பெரியசோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். 

    இதனை தொடர்ந்து வனவாசி அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறும் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, வனவாசி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி விடுதி கட்டிடங்கள் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.123.53 கோடி மதிப்பீட்டில் 86 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.118.93 கோடி மதிப்பீட்டில் 44 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தும், ரூ.46.39 கோடி மதிப்பீட்டில் 6,832 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    இதையடுத்து சேலத்திற்கு திரும்பும் முதல்-அமைச்சர், அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
    Next Story
    ×