search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய குஷ்பு கார்
    X
    விபத்தில் சிக்கிய குஷ்பு கார்

    விபத்தில் சிக்கிய குஷ்பு, மருத்துவ கலந்தாய்வு, பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    வேல் யாத்திரைக்கு சென்றபோது விபத்தில் சிக்கிய குஷ்பு, மருத்துவ கலந்தாய்வு, பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    * மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் முதல் கூட்டம் வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 89 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 83.35 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.46 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.52 சதவீதமாகவும் உள்ளது. 

    * மிகக்குறைந்த வெப்பநிலையில், பைசர் என்ற அமெரிக்க நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை சேமித்து வைப்பது சவாலாக இருக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    * தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்றும் நாளையும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

    * வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு சென்ற கார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

    * தமிழகத்தில் உள்ள 779 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மழை, வெள்ளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    * நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது.

    * சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, தனது அபராதத் தொகையான 10.10 கோடி ரூபாயை சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

    * கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியது.

    * அமெரிக்க தேர்தல் தொடர்பாக டிரம்பின் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் பாதுகாப்பு அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    * இங்கிலாந்து கிரிக்கெட் அணியின், பாகிஸ்தான் தொடரை அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    * புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். நடிகர் தவசிக்கு திரைத்துறையினர் தொடர்ந்து நிதியுதவி செய்துவருகின்றனர்.
    Next Story
    ×