
குமரி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ரூ.40 லட்சம் செலவில் தயார் செய்யப்பட்டுள்ள 68 அடி உயர புதிய கொடிமர பிரதிஷ்டை நிகழ்ச்சியை வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி நடத்துவதற்கு இந்து அறநிலையத்துறை ஆணையரின் அனுமதி பெறுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும், அறங்காவலர் குழு தலைவர் சிவ.குற்றாலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.10 கோடி செலவில் கழிவறை உள்பட 42 திருப்பணிகள் நடைபெறுகிறது. இதில் இதுவரை ரூ.5½ கோடி செலவில் 28 பணிகள் முடிவடைந்துள்ளது.
தற்போது ரூ.85 லட்சம் செலவில் திருப்பணிகள் நடக்கிறது. கோவிலில் ரூ.40 லட்சம் செலவில் 68 அடி உயர புதிய கொடிமரம் நிறுவப்பட உள்ளது. இந்த கொடி மரத்துக்கான மரத்தடி கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோனி வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. குமரி மாவட்ட கோவில்களில் உள்ள கொடி மரங்களிலேயே மிகவும் உயரமானது ஆகும். இதன் பிரதிஷ்டை வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி நடத்துவதற்காக இந்து அறநிலையத்துறை ஆணையரின் அனுமதியை பெறுவது குறித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி வருகிற 20-ந்தேதி நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியை கோவில் வளாகத்துக்குள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடந்தது. மேலும் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வரும் குறைந்தளவு பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டம் தொடக்கத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர் பாக்கியலட்சுமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.