search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியப்பிரியா
    X
    சத்தியப்பிரியா

    ராமநாதபுரம் அருகே கார் மோதி 9 மாத கர்ப்பிணி பலி - வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது

    பலத்த மழையில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் 9 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இந்த சம்பவத்தில் அந்த கர்ப்பிணியின் மாமியாரும் படுகாயம் அடைந்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேசுவரன். லாரி டிரைவர். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சத்தியப்பிரியாவுக்கும் (வயது 21) கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பெருங்குளத்தில் வசித்து வந்தனர்.

    சத்தியப்பிரியா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரது மாமியாரான வள்ளி, சத்தியப்பிரியாவை மருத்துவமனையில் பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அழைத்துக் கொண்டு பஸ்சில் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனை முடித்துவிட்டு ராமநாதபுரத்தில் இருந்து பஸ் மூலம் இரவில் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். பெருங்குளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினர். அப்போது பலத்த மழை பெய்தது. மின்தடையும் ஏற்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு கார் திடீரென வள்ளி, சத்தியப்பிரியா மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து, அவர்கள் இருவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப் பெற்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை ஆம்புலன்சு மூலம் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே சத்தியப்பிரியா உயிரிழந்தார். மாமியார் வள்ளி, பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பலியான சத்தியப்பிரியாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது, 2½ கிலோ எடை கொண்ட ஆண் சிசு இறந்த நிலையில், சத்யபிரியாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் தாய், சிசு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

    இதற்கிடையே விபத்திற்கு காரணமாக காரானது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தது என தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அதன் டிரைவரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விபத்தில் உயிரிழந்த சத்தியப்பிரியாவுக்கு நாளை வளைகாப்பு நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
    Next Story
    ×