search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீடாமங்கலம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் - போலீசார் விசாரணை

    நீடாமங்கலம் அருகே வெண்ணாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரை அடித்துக்கொன்று ஆற்றில் வீசியவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நீடாமங்கலம்: 

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒளிமதி கிராமம் அருகில் உள்ள கற்கோவில் என்ற இடத்தில் வெண்ணாற்றில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் சாக்குப்பையில் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் மற்றும் நீடாமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்குப்பையுடன் கிடந்த பெண் பிணத்தை கரைக்கு தூக்கி வந்தனர்.

    சாக்குப்பையில் இருந்து உடலை வெளியே எடுத்தபோது அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததும், கண், வாய், நெற்றி, கழுத்து உள்ளிட்ட உடல் பாகங்களில் காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த பெண் மூக்குத்தி, தோடு, கழுத்தில் சிறிய மற்றும் பெரிய சங்கிலிகள், காலில் கொலுசு அணிந்திருந்தார்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை மர்ம நபர்கள் அடித்துக்கொன்று கை, கால்களை கட்டி உடலை சாக்குப்பையில் வைத்து ஆற்றில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நீடாமங்கலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய மர்ம நபர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண்ணை அடித்துக்கொன்று உடல் ஆற்றில் வீசப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×