search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார்.
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வரும் அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் அவர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு சென்று அங்கு சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) எடப்பாடி அருகே பெரிய சோரகையில் உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். மேலும் அவர் அங்கு அரசு விழாவிலும் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-ந் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என தெரிகிறது. முதல்-அமைச்சர் வருகையையொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×