search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டபோது எடுத்த படம்.
    X
    வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டபோது எடுத்த படம்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 332 வாக்காளர்கள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 56 ஆயிரத்து 332 வாக்காளர்கள் உள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் தனி சட்டமன்ற (147) தொகுதியில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 466 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற (148) தொகுதியில் 22 லட்சத்து 66 ஆயிரத்து 224 வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரத்து 690 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பெயரில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 340 ஆண் வாக்காளர்களும், 379 பெண் வாக்காளர்களும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 379 ஆண் வாக்காளர்களும், 416 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,478 ஆண் வாக்காளர்களும், 1,294 பெண் வாக்காளர்களும், ஒரு இதர வாக்காளரும் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,706 ஆண் வாக்காளர்களும், 1,392 பெண் வாக்காளர்களும் 1 இதர வாக்காளரும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்குச்சாவடிகளும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும், மொத்தமாக 652 வாக்குச்சாவடிகளும் உள்ளன. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 680 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 49 ஆயிரத்து 710 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 412 வாக்காளர்கள் உள்ளனர்.

    குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 788 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 33 ஆயிரத்து 119 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 920 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2 லட்சத்து 73 ஆயிரத்து 468 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 82 ஆயிரத்து 829 பெண் வாக்காளர்களும், 35 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 332 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை வாக்குச்சாவடிகளுக்கு, வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாமல் இருந்தால் உடனடியாக வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் வருவாய் கோட்ட உதவி கலெக்டர் பத்மஜா, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், தேர்தல் பிரிவு தாசில்தார் துரைராஜ் மற்றும் அனைத்து தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×