search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டாங்கொளத்தூர் செந்தமிழ் நகர் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    காட்டாங்கொளத்தூர் செந்தமிழ் நகர் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

    பருவமழை தீவிரம் : தமிழகத்தில் பரவலாக மழை - ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் தொடர் மழையால் வேகமாக நிரம்புகின்றன.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது.

    தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்வதும், பின்னர் வெயில் அடிப்பதுமாக சென்னையில் இருந்து வந்தது. இதேநிலை தான் மாநிலம் முழுவதும் நிலவியது. ஏற்கனவே கொரோனா பரவலால் ஊரடங்கில் தவித்த மக்கள், மழையால் தீபாவளி கொண்டாட்டம் தடைபடுமோ? என்று பயந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகை தினத்தன்றும், அதற்கு முந்தைய தினத்திலும் சென்னையில் சில இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை. இதனால் பட்டாசு வெடித்து தீப ஒளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது. எழும்பூர், கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்தே மழை வெளுத்து வாங்கியது. இதனால் தீபாவளி விடுமுறை முடிந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,780 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரபடி அணையின் நீர்மட்டம் 20.70 அடியாக உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நிமிடமும் நீர்மட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 22அடியை எட்டியவுடன் உபரிநீரை திறந்துவிட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதேபோல் புழல் ஏரியின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 367 மில்லியன் கன அடி நீர் புழல் ஏரியில் உள்ளது. பூண்டி, சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    தலைநகர் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. அங்கு 8 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டியது. இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்தது.

    இதனால் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குமரி மாவட்டத்தில் பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மதுரையில் நேற்று காலை 9.30 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை கன மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி சென்றன. ராமநாதபுரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையாக தொடங்கி மாலையில் பலத்த மழையாக கொட்டியது.

    ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட பல மாவட்டங்களிலும் இந்த மழை நீடித்தது. கனமழை காரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் மாம்பட்டு கிராமத்தில் புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதேபோல், வந்தவாசியை அடுத்த வழூரில் வீட்டின் சுவர் இடிந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. கடலூரில் உள்ள கெடிலம், தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மூழ்கியது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், ‘குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடலூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்’ என்று கூறியுள்ளார்.

    நேற்று பிற்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காஞ்சீபுரத்தில் 16 செ.மீ., மரக்காணத்தில் 12 செ.மீ., வானமாதேவியில் 11 செ.மீ., கும்மிடிப்பூண்டி, மாமல்லபுரத்தில் 10 செ.மீ., திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், கேளம்பாக்கத்தில் தலா 9 செ.மீ., கடலூர், ஆரணி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் தலா 8 செ.மீ., செம்பரம்பாக்கம், பரங்கிப்பேட்டை, வந்தவாசி, அரவக்குறிச்சியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
    Next Story
    ×