search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு காய்கறி லாரியில் வெடிபொருட்கள் கடத்தல் - 2 பேர் கைது

    கோவை வழியாக கேரளாவுக்கு காய்கறி லாரியில் வெடிப்பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வாளையார் சோதனைச்சாவடி அருகே கேரள சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது.

    அதை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது தக்காளி பெட்டிகளை கீழே இறக்கி, உள்ளே இருந்த மற்ற பெட்டிக ளையும் போலீசார் சோதனையிட்டனர். அங்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு (வயது30), தர்மபுரியை சேர்ந்த ரவி (38) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சேலத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலுவாவிற்கு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே, 35 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 7,500 டெட்டனேட்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் பிரபு, ரவி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெடிபொருட்கள் எதற்காக கடத்தி வரப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×