search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்
    X
    பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்

    தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடி, மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல், தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    * நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதேசமயம் சீன பொருட்களை வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் புறக்கணித்ததால், சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    * கர்நாடகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்காக கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88.45 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 82.49 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். புதிய பாதிப்பு நேற்றைவிட கணிசமாக குறைந்துள்ளது. இதுவரை 1.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  4.65 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    * தமிழகத்தில் 6.10 கோடி வாக்காளர்கள் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு வெளியிட்டார். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    * தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார்.

    * எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் புதுவை இடஒதுக்கீட்டில் சேர, இருப்பிட சான்றிதழ் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    * அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

    * இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் கொண்ட தொடர்பால், தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

    * துபாயில், சமூக இடைவெளியுடன் இந்திய தம்பதிக்கு திருமண வரவேற்பு நடந்தது. இதில் காரில் இருந்தபடியே உறவினர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

    * ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் சோதனைக்கு தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில் இந்தத் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

    * ஐபிஎல் போட்டியை நடத்தியதற்காக எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு  பிசிசிஐ சுமார் 100 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    * மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகள் விளையாடியதில் இந்த வருடம்தான் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது என அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
    Next Story
    ×