search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடந்த 5 ஆண்டு கால வசூலை முறியடித்து சாதனை படைத்த மது விற்பனை

    தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டு கால வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
    சென்னை:

    புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களின்போது மது பிரியர்கள் விஸ்கி, பிராந்தி, ரம், வொட்கா மற்றும் பீர் உள்ளிட்ட மதுபானங்களை வாங்கி உற்சாகமாக அருந்துவது வழக்கம். பண்டிகை காலத்துக்கு முன்பும், பண்டிகை தினத்தன்றும் குடிமகன்கள் மதுக்கடைகளுக்கு, சாரை, சாரையாக படையெடுப்பார்கள்.

    இதனால் அனைத்து மதுக்கடைகளிலும் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மதுபிரியர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் மதுபானங்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டன.

    அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய தினமான கடந்த 13-ந் தேதி மட்டும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) மதுக்கடைகளில் ரூ.227.88 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.51.25 கோடியை மதுபிரியர்கள் வாரி கொடுத்துள்ளனர்.

    இதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் ரூ.47.37 கோடியும், சென்னை மண்டலத்தில் ரூ.44.25 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.43.26 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.41.75 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

    இதேபோல தீபாவளி தினத்தன்று அதாவது 14-ந் தேதி, தமிழகம் முழுவதும் ரூ.237.91 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.52.57 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.

    இதனைதொடர்ந்து சென்னை மண்டலத்தில் ரூ.50.11 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.48.10 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.44.32 கோடியும், கோவை மண்டலத்தில் 42.81 கோடியையும் மதுவுக்காக மதுபிரியர்கள் விட்டுக்கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த 13 மற்றும் 14-ந் தேதி ஆகிய 2 தினங்களில் ரூ.465.79 கோடிக்கு மது விற்றுள்ளன.

    தீபாவளி மது விற்பனை 3 நாட்களை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.330 கோடிக்கும், 2017-ம் ஆண்டு ரூ.282 கோடிக்கும், 2018-ம் ஆண்டு ரூ.325 கோடிக்கும், 2019-ம் ஆண்டு ரூ.455 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

    நடப்பாண்டு கடந்த பிப்ரவரி 6-ந் தேதி மற்றும் மே 6-ந் தேதி ஆகிய 2 முறை என மதுபானங்களின் விலை சுமார் 32 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. எனினும் கடந்த 13 மற்றும் 14-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.465.79 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நேற்றைய தின விற்பனை இன்னும் கணக்கிடப்படவில்லை. 2 நாட்கள் மது விற்பனை மூலமாக கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மது விற்பனை வசூலில் சாதனை படைத்துள்ளது.

    நேற்றைய தினத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.600 கோடிக்கு மது விற்பனை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், மதுபானங்களின் விலை 32 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் மதுபானங்களின் விற்பனை 5 முதல் 7 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×