search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - கணக்கில் வராத ரூ.1¼ லட்சம் பறிமுதல்

    சேலம் அருகே உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் டாஸ்மாக் மொத்த விற்பனை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக அம்பாயிரம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய அலுவலகம் அங்கு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் தீபாவளி மாமூல் வசூலிப்பதாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 4 மணி அளவில் டாஸ்மாக் குடோனுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த மேலாளர் அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையையொட்டி அலுவலகத்தை உள்பக்கமாக போலீசார் பூட்டிக் கொண்டனர். மேலும் அங்கிருந்த மேலாளர் மற்றும் பணியாளர்கள் யாரையும் அவர்கள் வெளியே விடவில்லை. இந்த சோதனையின் போது அங்கு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பணியாளர்கள் உள்பட அனைவரிடமும் கணக்கு கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் சரியான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×