search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    7.5 சதவீத ஒதுக்கீடு- 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்த மாணவனின் வழக்கு தள்ளுபடி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, 8-ம் வகுப்புவரை தனியார் பள்ளியில் படித்த மாணவனுக்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சுரேந்தர் சார்பில் அவரது தந்தை சங்கர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் என் மகன் 8-ம் வகுப்பு வரையும், அதன்பின்னர், திருச்செங்கோட்டில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தான். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 500-க்கு 440 மதிப்பெண்ணும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 457 மதிப்பெண்ணும். ‘நீட்’ தேர்வில் 239 மதிப்பெண்ணும் எடுத்துள்ளான்.

    தமிழக அரசு எடுத்து தீவிர முயற்சியினால், 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு நடப்பாண்டு முதல் வழங்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சுமார் 300 இடங்கள், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி முதல் மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் தொடங்குகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற பிரிவில் என் மகன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    அதனால் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற சான்றிதழ் கேட்டு நாமக்கல் மாவட்ட தலைமை கல்வி அதிகாரியிடம் விண்ணப்பம் கொடுத்தோம். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. 8-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்ததால், சான்றிதழ் வழங்க அவர் மறுத்து விட்டார்.

    எனவே, அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். ஒரு மருத்துவ இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது கல்வித்துறை சிறப்பு அரசு பிளீடர் முனுசாமி ஆஜராகி, “6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி சான்றிதழ் வழங்க முடியும்.

    மனுதாரர் மகன் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துள்ளதால், அவருக்கு தகுதி சான்றிதழ் வழங்க முடியாது. அரசு வழங்கும் 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களையும் பெற முடியாது” என்று வாதிட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×