
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் மீது பெண்கள் அளித்த புகாரின் பேரில் 6 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது சம்பந்தப்பட்ட பெண்களுடன் காசி நெருங்கி பழகி ஆபாச புகைப்படம் எடுத்ததோடு அதை காட்டி மிரட்டி பெண்களிடம் பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதோடு ஒரு கந்துவட்டி வழக்கும் பதிவாகி உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் காசி மீது கடைசியாக சென்னை மாணவி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. மாணவியுடன் காரில் உல்லாசம் அனுபவித்த காசி, மாணவிக்கே தெரியாமல் அதை வீடியோ எடுத்ததாக தெரிகிறது. பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததோடு மாணவியை பல முறை தன் ஆசைக்கு இணங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே காசியின் லேப் டாப் மற்றும் செல்போன்களில் அழிக்கப்பட்டு இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட வீடியோக்களை பார்த்ததும் போலீசாருக்கே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏன் எனில் லேப் டாப்பில் பல்வேறு போல்டர்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது. அனைத்துமே காசி பெண்களுடன் இருந்த ஆபாச வீடியோக்கள் ஆகும்.
இதில் பெரும்பாலான வீடியோக்கள் காரில் வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. காரில் வைத்து எடுத்த வீடியோக்கள் அனைத்துமே சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமல் காசி எடுத்துள்ளார். இதுபோக வீட்டில் வைத்தும் பெண்களுடன் இருந்தபோது வீடியோ எடுத்து இருக்கிறார். ஒரு சில வீடியோக்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரிந்தே எடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசியதையும் ஸ்கிரீன் ரிக்கார்ட் மூலம் பதிவு செய்து வைத்துள்ளார். அதாவது வீடியோ காலில் பெண்கள் காசியிடம் சகஜமாக பேசுகிறார்கள். பின்னர் காசியின் கபட பேச்சுக்கு அடிமையான பெண்கள் அவர் சொல்வதை எல்லாம் வீடியோ கால் மூலம் செய்கிறார்கள். அப்போது பெண்களிடம் உடைகளை கழற்றும்படி காசி சொல்கிறார். அதைகேட்டு பெண்கள் செய்வது அனைத்தும் ஸ்கிரீன் ரிக்கார்ட்டில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு பல்வேறு ஆபாச வீடியோக்கள் லேப் டாப் மற்றும் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டு இருக்கின்றன. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காசியின் லேப் டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மீட்டுள்ளோம். வீடியோக்களை வைத்து பார்க்கும் போது காசி எப்படியும் பல பெண்களுடன் பழகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். காசியால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஆதாரங்கள் சிக்கி இருப்பதால் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன“ என்றார்.
இதையடுத்து 5 நாட்கள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து காசியை நேற்று மாலை மீண்டும் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.