search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாத்தான்குளம் போலீசார்
    X
    கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாத்தான்குளம் போலீசார்

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கோர்ட்டில் ஆஜர்

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மதுரை சிறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசாரும் பலத்த பாதுகாப்போடு மதுரை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த 9 பேர் மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது.

    முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜராக வேண்டும் என்று 9 பேருக்கும் ஏற்கனவே கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி அவர்கள் 9 பேரையும், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    கோர்ட்டு வளாகத்தில் வேன் நுழைந்தபோது, அங்கு குவிந்திருந்த அவர்களது உறவினர்கள் அனைவரும் கூச்சலிட்டு அழுதனர். 9 பேரும் மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி வடிவேலு முன்பு ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சார்பில் ஆஜரான வக்கீல், “தனது கட்சிக்காரருக்கு சிறையில் போதிய வசதியின்றி அவதிப்படுகிறார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பில் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரினார்.

    மேலும் சிறையில் இருக்கும் போலீசாரை பார்ப்பதற்கு அவர்களது குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பின்னர் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. பின்னர் இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 9 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×