search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க வேண்டும்- வைகோ

    தமிழ்நாட்டின் சொத்துகளுள் ஒன்றாகிய தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சோழர்கள் காலத்தில் கோவில்களில் இருந்த ஓலைச்சுவடிகள், 1535-ம் ஆண்டு முதல் 1675-ம் ஆண்டு வரை தஞ்சையை ஆட்சிபுரிந்த நாயக்க மன்னர்களால் சேகரிக்கப் பெற்ற தமிழ், தெலுங்கு, சமற்கிருத ஏட்டுச்சுவடி நூல்கள், தஞ்சை அரண்மனையில் ‘சரஸ்வதி பண்டாரகம்’ என்ற நூலகம் அமைக்கப்பெற்றுப் பாதுகாக்கப்பட்டன.

    1675 முதல் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜியால், பல அரிய ஓலைச்சுவடிகளும், நூல்களும் சேகரிக்கப் பெற்று, சரஸ்வதி மகால் நூலகமாகப் பெயர் பெற்று அங்கே பாதுகாக்கப்பட்டன.

    1916-ம் ஆண்டு, தஞ்சை மாவட்ட ஆங்கிலேயே நீதிபதி ஒருவரின் முயற்சியால், அந்த நூலகம் அரசு உடைமை ஆக்கப் பெற்றது.

    நடுவண் அரசு, மாநில அரசு ஆகியவற்றின் நிதி உதவியோடு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகின்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே, நூலகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகின்றார். பல்வேறு துறைகள் சார்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே உள்ளன. குறிப்பாக, சித்த வைத்தியம் சார்ந்த ஓலைச்சுவடிகள் இங்குதான் பெருமளவில் உள்ளன.

    தமிழ்நாட்டின் கலை, பண்பாட்டுத் துறைகளின் அறிவுப் பெட்டகமாக இந்நூலகம் திகழ்கின்றது. கடந்த நூற்றாண்டில், தமிழ் அறிஞர்களின் மேற்பார்வையில் நூலகம் திறம்பட இயங்கி வந்தது. ஆனால், கடந்த 25 ஆண்டு களாக, மேலாண்மை இயக்குநர், மேலாண்மை அலுவலர்கள் இல்லை. அப்பொறுப்புகளுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது என்றாலும் பல ஆண்டுகளாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால், நூலகம் சீரழிந்து வருகின்றது. பல நூல்கள் திருட்டு போய் விட்டன.

    15 ஆண்டுகளுக்கு முன்பு, 65 ஊழியர்கள் இங்கே பணிபுரிந்து வந்தனர். இப்போது, 10 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். ஓலைச் சுவடிகளை, நூல்களாக அச்சிடும் பணி முறையாக நடைபெறவில்லை. தடைப்பட்டு நிற்கின்றது. அந்தப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

    திருடுபோன பழந்தமிழ் நூல்களை மீட்க வேண்டும்; நூலகத்தைத் தரம் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் சொத்துகளுள் ஒன்றாகிய தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தைப் பாதுகாப்பதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×