search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற நண்பர் கைது

    பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த தொழிலாளியை நண்பரே அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
    இடிகரை:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் அங்காளம்மன்புரத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 38). ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பூட்டிய வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தொழிலாளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பதியின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பதியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், திருமணம் ஆகாத திருப்பதி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அடிக்கடி புதுக்கோட்டையை சேர்ந்த திருமுருகன் (வயது 45) என்பவர் வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் திருப்பதியை, திருமுருகன் கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    போலீசாரிடம் திருமுருகன் அளித்த வாக்குமூலத்தில், நானும், திருப்பதியும் தொப்பம்பட்டியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தோம். இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் திருப்பதி தனியாக வசித்து வந்ததால், அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து மது அருந்தி செல்வது வழக்கம். சம்பவத்தன்று திருப்பதியின் வீட்டில் 2 பேரும் மது குடித்துக்கொண்டு இருந்தோம். தொடர்ந்து மது குடிக்க நானே செலவு செய்து வந்ததால் இதுதொடர்பாக எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது திருப்பதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினேன். மேலும் அங்கிருந்த போர்வையை எடுத்து திருப்பதியின் கழுத்தை நெறித்து கொன்றேன். பின்னர் அங்கே போதையில் தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்ததும் திருப்பதி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனாலும் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    பின்னர் திருமுருகனை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×