search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    அன்னூரில் செல்போன் உடைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை

    அன்னூரில் செல்போன் உடைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குப்பனூர் ஊராட்சி ஒட்டகமண்டலம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் தாரணி (வயது 13). இவர் அன்னூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா காலம் என்பதால் தாரணிக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

    கருப்பசாமி கூலி வேலை செய்தாலும், தனது மகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசையில், மகள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வசதியாக ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் செல்போனை தாரணி, கை தவறி கீழே போட்டுள்ளார். இதில் செல்போன் உடைந்துள்ளது.

    செல்போன் உடைத்தது தெரிந்தால், அப்பா மிகவும் கோபப்படுவார் என்று மாணவி பயந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஆடு மேய்க்க செல்வதாக கூறி நேற்று முன்தினம் மாலை சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தேடி சென்றனர் ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

    நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டனர். முதல் கட்ட விசாரணையில் மாணவி செல்போன் உடைந்ததால் பயத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
    Next Story
    ×