search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    கமலா ஹாரிசை போன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் தமிழகத்துடன் தொடர்பு?

    கமலா ஹாரிசை போன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் தமிழகத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் குடும்ப பெயரில் சிலர் தமிழகத்தில் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் கமலா ஹாரிஸ் தமிழக பாரம்பரியத்தை பின்னணியாக கொண்டவர். கமலா ஹாரிசின் வெற்றியை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் என்ற அவருடைய சொந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாடினார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிசை போன்று ஜோ பைடனுக்கும் உலக வரலாற்றில் நீண்ட நெடிய வரலாறுகளை கொண்டிருக்கும் தமிழகத்தோடு தொடர்பு உள்ளதா? என்று இப்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்தபோது ஜோ பைடன் முதல் இந்திய பயணமாக மராட்டிய மாநிலம் மும்பைக்கு வந்திருந்தார். மும்பை பங்குச்சந்தையில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, “எனக்கு இந்தியாவில் உறவினர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார்.

    இதேபோல 1972-ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட சில நாட்களில், மும்பையை சேர்ந்த பைடன் என்ற பெயரை கொண்ட ஒருவரிடம் இருந்து ஜோ பைடனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தாங்கள் உறவினர்கள் என்றும், தங்களுடைய மூதாதையர்கள் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்த அம்சங்களையும் ஜோ பைடன் நினைவுகூர்ந்தார். அப்போது ஜோ பைடனுக்கு 29 வயது. இதுகுறித்து அவர் தகவல் திரட்ட முயன்றார். ஆனால் ஒரு சில காரணங்களால் அதனை செய்ய முடியாமல் போனது.

    இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேசும்போது, “5 தலைமுறைக்கு முன்னதாக எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஜார்ஜ் பைடன் கிழக்கிந்திய கம்பெனியில் மாலுமியாக பணியாற்றினார். பின்னர் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, இந்தியாவிலேயே அவர் தங்கிவிட்டார்” என்றார். எனினும் கிழக்கிந்திய கம்பெனியில் ஜார்ஜ் பைடன் பணியாற்றியதற்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

    ஆனால் ஜோ பைடனின் குடும்ப பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் கிறிஸ்டோபர் பைடன் மற்றும் அவருடைய தம்பி வில்லியம் ஹென்றி பைடன் ஆகிய 2 பேர் பணியாற்றியதற்கான ஆவணங்கள் மும்பையை சேர்ந்த அயலக கம்பெனியில் இருக்கிறது. கிறிஸ்டோபர் பைடன் 12 வயது இருக்கும்போதும், அவருடைய தம்பி வில்லியம் ஹென்றி பைடன் 10 வயதை எட்டுவதற்கு முன்பும் லண்டனில் இருந்து கடல் பயணமாக இந்தியா வந்துள்ளனர்.

    கிறிஸ்டோபர் பைடன், வேல்ஸ் இளவரசி சார்லோட்டை என்ற கப்பலை இங்கிலாந்தில் இருந்து கொல்கத்தாவுக்கு 4 முறையும், ‘ராயல் ஜார்ஜ்’ என்ற கப்பலையும் இயக்கியிருக்கிறார். இதைத்தொடர்ந்து கிறிஸ்டோபர் பைடன் இந்தியாவில் தங்கிவிட்டார். தொடர்ந்து சென்னையில் அனைவரும் அறியப்பட்ட நபராகவும் மாறினார். 1830-ம் ஆண்டு இவர் ‘கடற்படையில் கண்ணியம்’ என்ற புதினத்தை எழுதினார்.

    மக்களிடம் நம்பிக்கையை விதைத்து, தங்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்க செய்வதும், மக்களை மரியாதையோடு நடத்துவதும் தான் கிறிஸ்டோபர் பைடனின் சித்தாந்தம் ஆகும். கிறிஸ்டோபர் பைடன், ஹாரியத் பிரீத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஹொராசியோ என்ற மகனும், 2 மகள்களும் இருந்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு மகள் கடல் பயணமாக இந்தியாவுக்கு வரும் வழியில் இறந்துவிட்டார்.

    கிறிஸ்டோபர் பைடன் 19 ஆண்டுகள் சென்னையில் இருந்தார். அப்போது ஆதரவற்றவர்கள், இந்தியர்கள் உள்பட மரணம் அடைந்த மாலுமிகளின் மனைவிகளின் நலனுக்காக இரக்கத்தோடும், அக்கறையோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டார். இதனால் அவர் அனைவராலும் நன்கு அறியப்பட்டிருந்தார்.

    1858-ம் ஆண்டு கிறிஸ்டோபர் பைடன் சென்னையில் மரணம் அடைந்தார். அவருடைய கல்லறை மற்றும் நினைவு குறிப்பு ஆகியவையும், செல்ல நாயுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படமும் சென்னை கதீட்ரல் தேவாலயத்துக்கு பின்புறம் உள்ள கல்லறை தோட்டத்தில் இருக்கிறது. சென்னை அருங்காட்சியகத்தின் கல்லறைகளின் குறிப்புகள் அல்லது சென்னை நினைவுச்சின்னங்களின் பட்டியலில் கிறிஸ்டோபர் பைடனை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் பைடனின் மகன் ஹொராசியோ சென்னை ராணுவத்தில் கர்னல் ஆக பணியாற்றி இருக்கிறார்.

    ஹொராசியா மற்றும் அவருடைய சகோதரி சென்னையில் திருமணம் செய்துகொண்டு எங்கேயாவது வசித்து வந்தார்களா? என்று ஆராய்ச்சியாளர்கள் தேடி வருகிறார்கள். அந்த வகையில் ஜோ பைடனின் மூதாதையர்கள் தமிழகத்தில் வசித்து வந்தார்களா? என்பது ஆராய்ச்சிக்குரிய ஒன்றாக உள்ளது. ஜோ பைடன் கூறியவாறு அவருடைய மூதாதையர்கள் பைடன் என்ற குடும்ப பெயருடன் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியிருந்தால், அதில் கிறிஸ்டோபர் பைடன் நிச்சயம் ஒரு தேர்வாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

    சென்னை, அயனாவரத்தில் உள்ள ஆங்கிலோ-இந்தியன் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஹாரி மேக்லூர் கூறியதாவது:-

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வில்லியம் பைடன் மற்றும் கிறிஸ்டோபர் பைடன் என்ற இரண்டு சகோதரர்கள் 1818-ம் ஆண்டு சென்னை வந்து கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றினார்கள். இதில் வில்லியம் பைடன் உடல்நல குறைவு காரணமாக ஒரு சில ஆண்டுகளிலேயே இறந்துவிட்டார். வில்லியம் பைடன் மற்றும் கிறிஸ்டோபர் பைடன் ஆகியோர் தங்களது இளம் வயதிலேயே இந்தியாவிற்கு வந்து உள்ளனர். வரலாற்றில் வில்லியம் பைடனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்து இருக்கிறார்கள்.

    வில்லியம் பைடனின் மகன் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவருடைய மகள் பற்றி குறிப்புகள் இல்லை. அவருடைய மகன் வழி வாரிசு பெண்களோ, மகளோ, மகள் வழி வாரிசுகளோ ஆங்கிலேயர்களையோ, ஆங்கிலோ-இந்தியர்களையோ, இந்தியர்களையோ திருமணம் முடித்து இருந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு பைடன் என்ற பெயர் வர வாய்ப்பு இல்லை. எனவே தான் இங்குள்ள ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தில் உறுப்பினராக பைடன் என்று யாரும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×