search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளியை தரையில் கொட்டி அழித்த விவசாயிகள்
    X
    தக்காளியை தரையில் கொட்டி அழித்த விவசாயிகள்

    கடும் விலை வீழ்ச்சியால் வேதனை... தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

    தொடர்ந்து விலை சரிந்து வருவதால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி: 

    தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. புரட்டாசியில், ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரை விற்பனையான நிலையில், அதன்பின்னர் படிப்படியாக குறைந்தது. இந்த மாத துவக்கத்தில் அதன் விலை மேலும் குறைந்து  ஐந்து ரூபாய் வரை விற்பனையானது. இன்று கிலோ ஒரு ரூபாய் என்ற அளவில் குறைந்ததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

    தர்மபுரி பாலக்கோட்டில் உள்ள தக்காளி சந்தை மிகவும் முக்கியமான சந்தை ஆகும். அப்பகுதியை சுற்றி உள்ள ஊர்களில் பயிரிடப்படும் தக்காளி பெரும்பாலும் இந்த சந்திக்குத் தான் விற்பனைக்கு வரும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தக்காளி, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். கர்நாடகத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    இன்று பாலக்கோடு சந்தைக்கு தக்காளி கொண்டு வந்த விவசாயிகள், கிலோ ஒரு ரூபாய் என்று கொள்முதல் செய்ததை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். ஒரு ரூபாய்க்கு கொடுப்பதை விட அழிப்பதே மேல் என கூறி தக்காளிகளை சந்தைக்கு வெளியே தரையில் கொட்டி அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 டன் தக்காளி இவ்வாறு அழிக்கப்பட்டது. 

    தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், இடைத்தரகர்களை கண்டித்தும் அவர்கள் இந்த போராட்டத்தில் இறங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்றால் சாகுபடி செய்த செலவு கூட கிடைக்காத நிலை உள்ளது. ,இதுதவிர மார்க்கெட்டில் தக்காளியை விற்க வேண்டும் என்றால் 20 கிலோவுக்கு 5 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு 20 ரூபாய் செலவாகிறது. இதுதவிர தக்காளியின் தரம் மற்றும் அழுகல் போன்ற காரணத்தை கூறி மேலும் விலையை குறைக்கின்றனர். 

    இப்படி பல வழிகளில் பாதிக்கப்பட்டு கடும் மன உளைச்சல் அடைந்த விவசாயிகள் பலர், தக்காளியை பறிக்காமல் வயலிலேயே அழித்து வருகின்றனர். சிலர், பறித்த தக்காளிகளை, போதிய விலை கிடைக்காத விரக்தியில், சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

    தக்காளிக்கு நிலையான விற்பனை விலை இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக அரசு தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்வதுதான் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என்றும் தெரிவித்தனர். 
    Next Story
    ×