search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனபால்
    X
    தனபால்

    பங்குச்சந்தையில் நஷ்டம் அடைந்ததால் தலைமை ஆசிரியையின் கணவர் தற்கொலை

    பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால், அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் கணவர், முதலீட்டு நிறுவனம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    கோவை:

    கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 48). இவருடைய மனைவி உமாதேவி. இவர் போத்தனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். தனபாலுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் அவர் கடந்த 15 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தார்.

    அத்துடன் அவர் கடந்த 3 ஆண்டுகளாக கோவை அண்ணா சிலை அருகே உள்ள ஒரு தனியார் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்து வந்தார். இதனால் அந்த தனியார் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனம் மூலம் பணம் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. முதலில் பங்குச்சந்தை முதலீட்டில் தனபாலுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. இதையடுத்து தொடர்ந்து அவர் பங்குச்சந்தை முதலீட்டில் அதிகளவு பணம் செலுத்தி வந்ததாக தெரிகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வந்தன. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் பணம் செலுத்தியவர்கள் சற்று தள்ளாடிப்போனார்கள்.

    அந்த வகையில் தனபாலுக்கும் இதே நிலை உண்டானது. அவர் செலுத்திய பங்குச்சந்தை முதலீடு நஷ்டத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதில் அவர் செலுத்திய தொகை அனைத்தும் நஷ்டம் அடைந்ததால் மிகுந்த மனவேதனையடைந்தார். இதனால் தான் வாடிக்கையாளராக உள்ள அந்த தனியார் நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று நான் முதலீடு செய்வது எல்லாம் நஷ்டத்தில் முடிகிறது. எனவே இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் என்று கேட்டு உள்ளார்.

    இந்த நிலையில் தனபால் நேற்று காலை 8 மணியளவில் தனது வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு அண்ணா சிலை அருகே உள்ள தனியார் பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று கேனில் பெட்ரோல் வாங்கி வந்தார். பின்னர் தனது மொபட்டில் அமர்ந்து இருந்தவாறு திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது உடலில் தீ பற்றி எரிந்ததால், அவர் வலிதாங்க முடியாமல் அலறித்துடித்தார்.

    இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தனபால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, தனபால் பங்குச்சந்தையில் ரூ.20 லட்சத்துக்கும் மேல் முதலீடு செய்து உள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தான் முதலீடு செய்த நிறுவனத்தின் முன்பு துண்டுச்சீட்டில் எழுதிய ஒரு கடிதத்தை ஒட்டி உள்ளார். அதில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து பணத்தை இழந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி இருந்தார். அதை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    பங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் கணவர் முதலீட்டு நிறுவனம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×