search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி கலெக்டர்
    X
    தர்மபுரி கலெக்டர்

    அமைப்புசாரா தொழிலாளர்களும் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தல்

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தி உள்ளார்.
    தர்மபுரி:

    அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை நலவாரியங்களில் பதிவு செய்யும் வழிமுறை எளிமைப்படுத்தப்பட்டு இணையதளம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அதிலுள்ள பணிச்சான்று மற்றும் சரிபார்ப்பு சான்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற வேண்டும்.

    பின்னர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், வயதிற்கான ஆவணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நியமனதாரருக்கான ஏதேனும் ஒரு அடையாள ஆவணம் ஆகிய அசல் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது கணினி மையங்களை அணுகி நல வாரியங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு பதிவு எண் விவரம் அந்த அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்படும்.

    அதன் பிறகு பதிவு அட்டையை தொழிலாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கல் உடைப்பவர்கள், கட்டிட தொழிலாளர்கள், தச்சு தொழிலாளர்கள், உணவு நிறுவனங்களின் பணிபுரிபவர்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகிப்பவர்கள், முடி திருத்தும் பணி செய்வோர் உள்ளிட்ட தொழிலாளர்கள் அனைவரும் இணையதளம் மூலம் நல வாரியத்தில் பதிவு செய்து நலத்திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×