search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பிள்ளையார் கோவிலை காணலாம்
    X
    தஞ்சையில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட பிள்ளையார் கோவிலை காணலாம்

    தஞ்சையில் பழமை வாய்ந்த கோவில் மண்டபம் மீட்பு

    தஞ்சையில் பழமைவாய்ந்த கோவில் மண்டபத்தில் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை நாணயக்கார செட்டி தெருவில் உள்ள தொப்பரங்கட்டி பிள்ளையார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இந்த பழமையான கோவிலுக்கு சொந்தமான ராஜகோபுர மண்டபம் அருகில் உள்ளது. இந்த மண்டபம் பாழடைந்து இடிந்த நிலையில் உள்ளது.

    மண்டபத்தில் உள்ள துவார பாலகர்கள் சிற்பம் சிதைந்துள்ளது. மேலும் கோபுரத்தில் பல்வேறு அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் சிற்பங்களும் சிதைந்துள்ளது. அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் பணியாற்றி வந்த ஒருவர், தங்குவதற்கு வேறு இடவசதி இல்லாத காரணத்தினால் தொப்பரங்கட்டி பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் தங்குவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார்.

    அதற்கு அவர்கள், வாடகைக்கு குடியிருக்க அனுமதி அளித்தனர். அதன்படி கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் மண்டபத்தில் வாடகைக்கு குடியேறினார். பிறகு அவரது மகன் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கோவில் மண்டபத்தை ஆக்கிரமித்து வசித்து வருவதாகவும், அதற்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பலர் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் கோவில் மண்டபத்தை அறநிலையத்துறையினர் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

    இதையடுத்து அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர். அதன்பிறகும் மண்டபத்தை காலி செய்யாமல் வசித்து வந்தனர். இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் தென்னரசு, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உடனடியாக மண்டபத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அதன்பிறகும் மண்டபத்தை விட்டு காலி செய்ய மறுப்பு தெரிவித்ததால் இந்து சமய அறநிலையத்துறை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அறநிலையத்துறையினருக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி கோர்ட்டு உத்தரவை நகலை மண்டபத்தில் குடியிருந்தவரிடம் அறநிலையத்துறையினர் வழங்கினர். இதையடுத்து 430.54 சதுர அடி பரப்பு கொண்ட கோவில் மண்டபத்தில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த மண்டபத்தை அறநிலையத்துறையினர் நேற்றுமுன்தினம் மீட்டனர். பின்னர் மண்டபத்தை வீடாக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த கதவு உள்ளிட்டவைகளை அகற்றினர். மேலும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. அதில், இந்த இடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×