
இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பன்னாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் முக்கிய நகரங்களில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருச்சி விமான நிலையத்தில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா போன்ற நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு விமானத்தில் வருபவர்கள் பலர் தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த 7 பேரிடம் இருந்து ரூ.1¼ கோடி மதிப்பிலான 2,596 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் துபாயில் இருந்து நேற்று காலை 5.20 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தை சேர்ந்த சம்சுதீன் (வயது 32) தனது உடைமைகளில் மறைத்து 2 கிலோ 675 கிராம் தங்க கட்டிகளை எடுத்து வந்ததை கண்டு பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடியே 30½ லட்சம் ஆகும். சிறப்பு விமானத்தில் கடத்தப்படும் தங்கத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திருச்சி விமான நிலையத்தில் தங்கவேட்டை தொடர்ந்து வருகிறது.