search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹக்கீம்
    X
    ஹக்கீம்

    செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கோவையை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது

    செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கோவையை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலம் கடப்பா வனப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. வெளிநாடுகளில் இந்த செம்மரத்திற்கு அதிக மதிப்பு உள்ளது.

    எனவே சட்டவிரோதமாக செம்மரங்களை சிலர் வெட்டி கடத்தி வருகிறார்கள். செம்மரம் வெட்டப்படுவதை தடுக்க ஆந்திர மாநில அரசு சிறப்பு காவல் படையை உருவாக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, கடந்த சில ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மர கடத்தல்காரர்களை கைது செய்யப் பட்டு உள்ளனர். பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் செம்மரத்தை வெட்டி கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    சேலத்தை சேர்ந்த செம்மரக்கடத்தல்காரர்கள் 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2-ந் தேதி ஆந்திராவில் இருந்து 2 கார்களில் செம்மரங்களை வெட்டி, கட்டைகளை கடத்திக்கொண்டு தமிழகத்தை நோக்கி வந்தனர். அவர்களை, ஆந்திர சோதனைச்சாவடியில் போலீசார் மடக்கியபோது கார்கள் நிற்காமல் சென்றன. உடனே போலீசார் அந்த கார்களை துரத்தி சென்றனர். இதனால் கடத்தல்காரர்கள் கார்களில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கடப்பா-தாதிபத்ரி சாலையில் எதிரே வந்த லாரியின் டீசல் டேங்க் மீது மோதியது. இதில் கடத்தல்காரர்கள் வந்த கார் தீப்பிடித்தது. காருக்குள் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கடப்பாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விசாரணையில், அவர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கூலிக்காக ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கட்டைகளை கடத்தி வந்ததும், இவர்களை கோவை குனியமுத்தூர் காவேரிநகரை சேர்ந்தவர் ஹக்கீம் என்கிற பாட்ஷா (வயது 41) என்பவர் இயக்கியதும், இவர் மீது ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரத்தை வெட்டி கட்டைகளை கடத்தியதாக ஆந்திர மாநில கடப்பா போலீசில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

    மேலும் ஹக்கீமை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் தேடி வருவதும், அவர் போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க கோவையில் ஜவுளி வியாபாரி போல் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து கடப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்பரசன் தலைமையிலான செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவை வந்து, மாநகர போலீசாரின் உதவியுடன் ஹக்கீமை நேற்று மடக்கிப்பிடித்தனர். அப்போது,அவர் தான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கடத்தல்காரர்களை ஏவி செம்மரங்களை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை கடப்பா போலீசார் கைது செய்தனர். அவருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×