search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு
    X
    பட்டாசு

    தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை

    சென்னை தீவுத்திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை தொடங்குகிறது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை காலத்தின்போது பட்டாசு விற்பனை கடல் என்று சென்னை தீவுத்திடல் அழைக்கப்படுகிறது. சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பட்டாசு வாங்குவதற்காக தீவுத்திடலுக்கு படையெடுத்து வருவது வழக்கம். எனவே தீபாவளி சீசன் தொடங்கியதும், தீவுத்திடலில் எப்போது பட்டாசு விற்பனை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளது. தீவுத்திடலில் 40 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு போல கூட்ட நெரிசல் இல்லாமல் இருப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்றி, பட்டாசு வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று மாலை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், பட்டாசு கடைகளுக்கான உரிமம் இன்னும் வியாபாரிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க செயலாளர் அனீஸ் ராஜா கூறுகையில், “பட்டாசு கடைகளுக்கான உரிம சான்று எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. நாளை (இன்று) காலை எங்களுக்கு உரிமம் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். எங்களுக்கு உரிமம் கிடைத்துவிட்டால் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து, பட்டாசு கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபடுவோம்” என்றார்.

    எனினும் திட்டமிட்டப்படி தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு 80 கடைகள் அமைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருடம் கடைகளின் எண்ணிக்கை 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×